Header Ads

அலையாத்தி காடுகள்: எப்போது நீங்கும் தடை?

அலையாத்தி காடுகள்

அலையாத்தி காடுகள்: எப்போது நீங்கும் தடை? காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகள்!

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே ஆசியாவில் இரண்டாவது மிகப் பெரிய பரபரப்பளவு கொண்ட அலையாத்திக்காடுகள் உள்ளன. ஆற்றின் வழியே படகில் நெடுதூரப் பயணம் மனதை சொக்க வைக்கும். இருபுறமும் அடர்ந்து கிடக்கும் அலையாத்தி காடுகளின் இயற்கை அழகு நம்மை மெய்மறக்க வைக்கும். உள்ளே சென்றதும் லகூன் பகுதியில் உள்ள அழகான குட்டிக்குட்டி தீவுகள் வியக்க இருக்கும்.
இக்காடுகள் வெப்பமண்டல,மிதவெப்பமண்டல காடுகளாக உப்பங்களிகள் காணப்படும் பகுதியில் உருவாகின்றன.
பல்வேறுவகை நீர்வாழ் உயிரினங்களின் உற்பத்திக் களமாகவும்,கடற்கரையோர நிலப்பகுதிகளின் பாதுகாப்பு அரணாகவும் இக்காடுகள் அமைந்துள்ளன.
உலக அளவில் இக்காடுகள் 2 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் ஏறத்தாழ 30 நாடுகளில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இத்தகைய காடுகள் 4827 சதுர கி.மீ பரப்பளவில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
அரண்
இந்தியாவில் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையோர பகுதிகளிலும், அந்தமான் தீவு கூடங்களிலும் இக்காடுகள் வளர்கின்றன. மரம், விறகு, கரி, கூரை ஆகியவற்றில் உற்பத்தியாகும் மீன், நண்டு,இறால் அரிய வகையானது. இனப்பெருக்க பகுதிகளாக கடலோர சதுப்பு நிலக்காடுகள் விளங்குகின்றன. புயல் மற்றும் சூறாவளி காற்றிலிருந்தும்,சுனாமியிலிருந்தும் கடலோர கிராமங்களையும் கிராம மக்களையும் பாதுகாக்கும் அரணாக விளங்குகின்றன. மேலும் கடலோரங்களில் ஏற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுத்து நிறுத்துகிறது.
சதுப்பு நிலத் தாவரங்கள்
மொத்தம் முத்துப்பேட்டை பகுதியில் 11,885,91 ஹெக்டேர் பரப்பளவில் காணப்படக்கூடிய இக்காடுகள் திருவாரூர்,தஞ்சை, நாகை மாவட்டங்களில் பரவி உள்ளது. காவிரி ஆற்றுப் படுகையின் தென்கோடியில் முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்திகாடு அமைந்துள்ளது.
அலையாத்தி காடுகள்
தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம் மேற்கு பகுதியில் துவங்கி நாகை மாவட்டத்தின் கோடியக்கரை பகுதி கிழக்கு வரை நீண்டுள்ளது. இதன் இடையில் உள்ள முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் தெற்கு எல்லையாக பாக் ஜலசந்தியையும்,வடக்கு எல்லையாக களிமண் உப்பளத்தையும் கொண்டுள்ளது.
மொத்தம் ஆறு வகையான சதுப்பு நிலத் தாவரங்கள் அதாவது அலையாத்தி, நரிகண்டல், கருங்கண்டல், நீர்முள்ளி,தீப்பரத்தை மற்றும் சுரபுன்னை போன்ற தாவரங்கள் காணப்படுகிறன்றன. இவற்றில் அலையாத்தி மரம் முதன்மையான தாவரமாக காணப்படுகிறது. இது மொத்த சதுப்புநில தாவரங்களின் எண்ணிக்கையில் 95சதவீதத்திற்கு மேலாக காணப்படுகிறது.
அலையாத்தி காடுகள்
மேலும் 147 சிற்றின வகை பறவைகள் இங்கு காணப்படுகின்றன. மிக அதிகமாக பூநாரை, கூளக்கடா, நீர்காகம், ஊசிவால் வாத்து, குளத்து கொக்கு, வெண்கொக்கு போன்றவை இப்பகுதிக்கு வருகின்றன. மேலும் ஓநாய், மரநாய், கீரி, பழந்தின்னி,வெளவால்கள், காட்டு முயல் போன்ற 13வகை பாலூட்டிகள் உள்ளன.
சுற்றுலா
முத்துப்பேட்டை பகுதியில் அலையாத்தி காடுகளுக்கு உள்ளே சென்று பார்ப்பதற்கு ஏற்ற வகையில் மரம் நடப்பாதைகள், உயர் கோபுரங்கள்,ஓய்வெடுக்க குடில்கள் காட்டுக்குள் சுற்றுலா பயணிகள் செல்லும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வனத்துறையினரால் அமைக்கப்பட்டிருக்கின்றன.
சுற்றுலா பயணிகள் எந்தவித அச்சமும் பயமும் இன்றி பயணம் செய்யலாம். சுற்றுலா பயணிகளுக்கும் எந்தவித தடையும் ஏற்படாத வகையில் நூற்றுக்ணக்கான படகுகள் தயார் நிலையில் உள்ளன. பயணம் செய்யும் முன்பு முத்துப்பேட்டை வனத்துறை அலுவலகத்தில் பயணம் தொடர்பான தகவல்களை தெரிவித்து விதிமுறைக்கு உட்பட்டு அனுமதி பெறவேண்டும்.
தடை
இந்நிலையில் இந்தாண்டு கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், குரங்கினி மலையில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, அதனை காரணம் காட்டி அலையாத்தி காடுகளை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தனை பெருமையை கொண்ட முத்துப்பேட்டை அலையாத்தி காடுகளை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
அலையாத்தி காடுகள்
சுற்றுலாத் தலத்தை விபத்தை காரணம் காட்டி மூடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் அரசு அதற்கான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
முத்துப்பேட்டையில் அலையாத்தி காடுகள் ஆசியாவிலேயே இரண்டாது பரப்பளவை கொண்டது .இந்த அலையாத்தி காடுகளைப் பாதுகாக்க முன்னாள் முதல்வர் ஒன்றரை கோடி நிதி ஒதுக்கீடு செய்து மேம்படுத்தவும் சுற்றுலாத் தலமாகவும் அறிவித்தார். அதற்கான எந்த பணியும் நடைபெறவில்லை.
ஒரு சுற்றுலாத் தலத்தை விபத்தை காரணம் காட்டி மூடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே தமிழக அரசு அலையாத்தி காடுகளை மேம்படுத்தி சுற்றுலாத் தலமாக அறிவிப்பதோடு சுற்றுலாத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும், பொதுமக்கள் சென்று வருவதற்கு பாதுகப்பான ஏற்பாடுகளை வனத்துறையும் அரசும் செய்து தர வேண்டும் என்கிறார் சமூக ஆர்வலர் மாலிக் .
வன அலுவலர் மாரியப்பன் இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், திண்டுக்கல் குரங்கனி பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதில் 22 பேர் உயிரிழந்த நிலையில் இந்தப் பகுதியிலும் அதே போல் தீ விபத்து ஏற்படாமல் இருக்க மதுபாட்டில், தீ விபத்தை ஏற்படுத்தும் பொருட்கள் , பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
எனினும் வனத்துறைக்குத் தெரியாமல் எடுத்துச் செல்வது தொடர்கிறது. அதனால் நாங்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவோம். தற்போது பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றார்.
மேலும், மாவட்ட வன அலுவலர் சரியான முடிவுதான் எடுத்துள்ளார் .இங்கே கடல் நாய் , நீர் நாய் , வெளிநாட்டு பறவைகள் , டால்பின்கள் இப்பகுதியில் சீசனில் வந்து செல்லும் என்றார்.
வன அதிகாரி வீராசாமி கூறுகையில், குரங்கனி தீ விபத்தினால் தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், மே, ஜுன் மாதங்களில் சுற்றுலா செல்ல அனுமதியளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Source: BBC Tamil

No comments