Header Ads

கேரளாவில் பரவும் நிப்பா வைரஸுக்கு பலர் பலி

'நிப்பா வைரஸ்'

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வரும் நிப்பா வைரசால் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் உயிரிழந்த 3 பேருக்கு நிப்பா வைரஸ் தாக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 பேரின் மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு, முடிவுகளுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிப்பா வைரசின் அறிகுறிகளால் 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய கேரள சுகாதாரத்துறை செயலாளர் ராஜீவ் சதானந்தன், இந்த வைரசால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளித்த செவிலியர் ஒருவரும் உயிரிழந்ததாக கூறினார்.
"நிப்பா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் ரத்த மாதிரிகளை புனேவில் உள்ள தேசிய தொற்று நோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். இதுவரை அதில் மூன்று பேர் இறந்ததற்கு நிப்பா வைரஸ்தான் காரணம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார்
தற்போது இந்த நோய் மேலும் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும் ராஜீவ் தெரிவித்தார்.
நிப்பா வைரசின் பிறப்பிடம் fruit bats எனப்படும் வௌவால்கள்.
இதுவரை இதனால் இறந்த மூன்று பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். வௌவால்கள் கடித்த மாம்பழங்களை சாப்பிட்டதால் இவர்கள் இறந்திருக்கக்கூடும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதனையடுத்து, கேரள மாநிலத்திற்கு மத்திய நோய் கட்டுபாட்டு மைய இயக்குநரை நேரில் சென்று பார்வையிடுமாறும், தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வலியுறுத்தி உள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா தெரிவித்துள்ளார்.






ட்வீட்படத்தின் காப்புரிமைTWITTER

நிப்பா வைரஸ் என்றால் என்ன?
நிப்பா தொற்று என்பது விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கடுமையான நோயை உண்டாக்கும் வைரசாகும். இதன் பிறப்பிடம் fruit bats எனப்படும் வௌவால்கள்.
1998ஆம் ஆண்டு முதன்முதலில் மலேஷியாவில் இந்த வைரசால் நோய் தொற்று ஏற்பட்டது. வௌவால்களிடம் இருந்து பன்றிகளுக்கு இந்த நோய் பரப்பப்பட்டது.
2004ஆம் ஆண்டு வங்க தேசத்தில் fruit bats வௌவால்கள் கடித்த பனையை சாப்பிட்ட மனிதர்களுக்கு நிப்பா வைரஸ் பரவியது. ஒரு மனிதரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதும் கண்டறியப்பட்டது.
நிப்பா வைரசால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ எந்த தடுப்பூசியும் இல்லை. இதனால் பாதிக்கப்படும் மனிதர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டும்.
(தகவல்: உலக சுகாதார அமைப்பு)
நிப்பா வைரஸ் : அறிகுறிகள் என்ன?
ஆசியாவில் சில விலங்குகள் மூலம் பரவும் நிப்பா வைரஸ், எந்த வயதுடையவர்களையும் தாக்கும். அதன் அறிகுறிகள்:
  • கடும் காய்ச்சல் மற்றும் தலைவலி
  • மூளை வீக்கம்
  • அயர்வு
  • சுவாசப் பிரச்சனைகள்
நிப்பா வைரஸ் தாக்கிய 5 - 14 நாட்களுக்குள் இந்த அறிகுறிகள் தென்படும்.
"தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை"
கேரளாவில் பரவி வரும் நிப்பா வைரசால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிபிசியிடம் தெரிவித்தார்.


கேரளாவில் இந்த நோய் பரவி வருவது உண்மைதான் என்று குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டில் யாரும் பீதி அடைய வேண்டாம் என்று கூறினார்.
Source: https://www.bbc.com/tamil/india-44194640

No comments