மர்மமாக இறந்த பிரிட்டன் ரக்பி வீரர்
இலங்கையில் மர்மமாக மரணித்த பிரிட்டனின் இரண்டு ரக்பி விளையாட்டு வீரர்களில், தாமஸ் பெட்டி என்பவரின் உடலை அவரது தந்தையிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

உடலை பிரிட்டனுக்கு எடுத்துச் செல்வதற்கான அனுமதியையும், ஒழுங்குகளையும் செய்யுமாறு இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இன்று, மே 17, உத்தரவிட்டார்.
நட்பு ரீதியான ரக்பி போட்டிகளில் விளையாட கடந்த மே 10 அன்று பிரிட்டனைச் சேர்ந்த 'Clems Pirates Rugby' அணியினர் இலங்கை வந்தனர். இந்த அணியின் 25 வயதான தாமஸ் ஹாவர்ட் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இதன்பின்னர் 26 வயதான தாமஸ் பெட்டி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் மே 15 அன்று உயிரிழந்தார். ரக்பி வீரர்கள் உயிரிழந்த தகவல் அறிந்து பிரிட்டனில் இருந்த அவர்களது குடும்பத்தார் கடந்த திங்கட்கிழமை இலங்கை வந்தனர்.
இந்த நிலையில், உயிரிழந்த வீரர்களின் மரண விசாரணை சாட்சியங்கள் நேற்றும் இன்றும் கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் பதியப்பட்டது.
இன்றைய சாட்சிப் பகிர்வில் உயிரிழந்த வீரர்கள் தங்கியிருந்த விடுதி அதிகாரியொருவரின் சாட்சி பதியப்பட்டது. நிறைவாக, பிரிட்டன் ரக்பி வீரர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து வேறு யாரேனும் விரும்பினால், சாட்சியமளிக்க முடியும் என நீதிபதி பகிரங்கமாக நீதிமன்றத்தில் அறிவித்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் எவரும் முன்வராததால் இன்றைய சாட்சிப்பதிவுகளை நிறைவுசெய்தார்.
அத்துடன், கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த தாமஸ் ஹாவர்ட் என்ற வீரரின் உடல் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா என்பதை குறித்த தகவல் நீதிமன்றத்திடம் இல்லையென நீதிபதி குறிப்பிட்டார். இதனால் குறித்த விபரங்கள் அடங்கிய அறிக்கையை நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்ட மருத்துவ அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

உயிரிழந்த வீரர்களின் மரண விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் சட்ட மருத்துவ அதிகாரியின் முழுமையான அறிக்கை கிடைக்கவில்லை. மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை என சட்ட மருத்துவ அதிகாரி தனது முதல் அறிக்கையில் குறிப்பிட்டுளு;ளார்.
இதனால் உடற்பாகங்கள் இரசாயனப் பகுப்பாய்விற்கு அனுப்பிவைத்துள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த பரிசோதனைகள் நிறைவடைந்து விரிவான அறிக்கை கிடைத்த பின்னரே மரணத்திற்கான காரணத்தைக் கூற முடியும் என நீதிபதி இதன்போது தெரிவித்தார்.
Source: BBC Tamil
Post a Comment